சாண்டில்யனின் படைப்புகளை தமிழக அரசு நாட்டுடைமையாக்கியுள்ளது

சாண்டில்யனின் ‘கடல் புறா' - முகவுரை

(சென்னை பல்கலை கழக வரலாற்றுப் பேராசிரியர் டாக்டர் என். சுப்ரமணியன், எம். ஏ.,. பிஎச்.டி., அளித்த கடல் புறாவிற்கான முகவுரை)
நெடுநாளாகக் `குமுத'த்தில் தொடர் கதையாக வெளிவந்து இப்பொழுது தனிவடிவில் வரும் `கடல் புறா' என்னும் இந்நூலுக்கு முகவுரையொன்று தரவேண்டுமென்று ஆசிரியர் `சாண்டில்யன்' என்னைக் கேட்ட பொழுது இத்தகைய பணிக்கும் எனக்கும் தொடர்பு இருக்க முடியுமா என்று என்னை நானே வினவிக் கொண்டேன். இரண்டு காரணங்களை முன்னிட்டு அத்தகைய தொடர்பில் தவறுமில்லை, அதற்க்கு தேவையுமுண்டு என்று கருதி இம்முகவுரையை எழுதுகிறேன். முதற்கண் வரலாற்று ஆராய்ச்சியை முழுநேரத் தொழிலாக ஏற்றுக்கொன்டுள்ள பல்கலைகழகப் பேராசிரியர்கள் வரலாற்றுப் புதினங்களுக்கு முகவுரை எழுதும் மரபு விரும்பதகாதது என்று அண்மையில் சிலர் கூறியுள்ள கருத்தை நான் ஒப்பவில்லை: அடுத்து நம் நாட்டு வரலாற்று நிகழ்ச்சிகளை அடிப்படையாகக் கொண்டு நாம் இயற்ற புகும் நவீனங்கள், மேனாட்டில் எழும் அத்தகைய இலக்கியத்தினின்றும் வேறுபட்டிருக்கும் நிலையை வெளிப்படையாகவும் உறுதியாகவும் விளக்க வேண்டும் என்னும் அவா எனக்குச் சில காலமாக உண்டு. இந்நூலுக்கு முகவுரை வழங்குமுகத்தான் அதற்க்காண வாய்ப்பு எனக்கு கிடைத்தமைக்கு இந்நூலாசிரியரிடம் கடப்பாடுடையேன்.
வரலாற்று புதினங்களை ஆக்கும் முற்ச்சி மேனாடுகளில் பல நூற்றாண்டுப் பழமையுடையது; ஆயினும் தமிழ் இலக்கியத்திற்கு அது ஒரு புதுமை என்பதில் சிறிதும் ஐய்யமில்லை; இம்முயற்சி பெருமளவு, இலக்கியச் சுவையுடையோரால் போற்றப்பெருமளவு, வெற்றி கண்டுள்ளது என்பதும் என் கருத்து. தமிழ் மொழியில் இதுகாறும் வெளிவந்துள்ள வரலாற்று நவீனங்கள் பலவற்றுள்ளும் சிலவே நம் இலக்கியத்தில் நின்று நிலவும் தகுதியுடையவை என்றும், அச்சிலவற்றின் முண்ணனியில் நிற்கும் தகுதி `சாண்டில்யன்' அவர்களின் இலக்கியப் படைப்புகளுக்கு உண்டும் என்றும் நான் கருதுகிறேன். `கடல் புறா'வின் இலக்கியத் தகுதியைப் பற்றிய விரிவான ஆரய்ச்சி இம் முகவுரையில் வேண்டுவதின்று; ஏனெனில் அத்தகுதி தமிழர்கள் யாவராலும் ஒரு படித்தாகப் போற்றி ஒப்புக்கொள்ளப் பட்டது. என் கருத்தும் அதுவே என்று முதலிலேயே கூறி விடுகிறேன். இது தவிர, இந்நூல் எவ்வளவு தொலைவு வரலாற்றாளர்களால் உண்மையென்று அறுதியிடப்பட்டுள்ள நிகழ்ச்சிகலை யொட்டி அமைந்திருக்கிறது என்பதை எடுத்துக்காட்டுவதையே சிறப்புப் பணியாகக் கொள்ள விரும்புகிறேன்.
மேலை நாடுகளில் வரலாற்று நவீனங்களை எழுதி மாபெரும் வெற்றி கண்ட பெருங்கலைஞர்களான சர் வால்டர் ஸ்காட், அலெக்ஸாந்திரே தியூமா, லியோ டால்ஸ்டாய் போன்றோர்க்கு எளிதில் கிடைத்த சாதன வாய்ப்பு நம் நாட்டு வரலாற்று புதினங்களை யாக்குவோர்க்குக் கிடையாமை வருந்தத்தக்க உண்மையாகும்.
இக்கூற்று சிறிது விளக்க வேண்டுவதாகும்.
வரலாற்று நவீனங்களை இயற்ற புகுவோர்க்கு இலக்கிய பயிற்ச்சி இருத்தலோடு பண்டை வரலாற்று நிலையைத் தம் அகக் கண்முன்னே கொணர்ந்து நிறுத்தி அச்சூழ்நிலையில் தமது கதையை அமைத்து, அவ்வமைப்பிற்கேற்ப கதயைப் புனைய வேண்டிய கட்டுப்பாடும் வேண்டும். வரலாற்றுச் சூழ்நிலையில்லாமல், மானிடப் பண்பைப் பொதுப்படையாகச் சமூகச் சூழ்நிலையில் வைத்து இல்லன புனையும் குறிக்கோள் ஒன்றினையே மேற்கொள்ளும் ஆசிரியர்களது படைப்புகள் வெறும் கதைகளாம். இத்தகைய கதைகளை எழுதுவோர்க்கு இலக்கிய பயிற்ச்சியும் கற்பனைத் திறனும் மட்டும் இருந்தால் போதும். இங்ஙனமின்றி, ஆசிரியரால் வரையறுக்கப்படாமல், தானே ஒரு வரையறைக்குட்பட்டு நிற்கும் வரலாற்றுச் சூழ்நிலையில் கதையை அமைத்துவிடும் ஆசிரயரது கற்பனை கட்டுக்கடங்காமல் திரிய முடியாது, வரலாற்றுக் கட்டுக்கு அடங்க வேண்டும். வரலாறு வரையறுக்காத இடங்களில் தமது கற்பனை திறனை காட்டலாமாயினும், இக்கற்பனைகள் வரலாற்று உண்மைகளோடு முரணாகாதவாறு அமைய வேண்டும். ஆதலால் வரலாற்றுக் கதைகளை எழுதுவோர்க்கு வெறுங் கதைகளை யாப்பவர்களைவிட இலக்கிய பொறுப்புணற்ச்சி மிகுதியாக இருத்தல் வேண்டும். ஈதிங்கினமாக, வரலாற்றுக் கதையை எழுதப்புகும் ஆசிரியர் தமது கதை எந்த நாட்டில் எந்தக் காலத்தில் அமைகிறதோ அந்த நாட்டு- அக்காலத்து வரலாற்றைச் செம்மையுறக் கற்று அக்கல்விக்குத் `தக நிற்றல் வேண்டும்'; அதாவது அசோகனை பற்றிய கதையொண்று இயற்றுவாரது நவீனத்தில் விவரிக்கப்பெறும் சமூகச் சூழ்நிலை குப்தர் காலத்து சூழ்நிலையாகவோ, சோழர் காலத்துச் சூழ்நிலையாகவோ இருத்தல் கூடாது; அன்றியும் ஆசிரியர் தம் காலத்துக் கருத்துகளையும் நிலையங்களையும் உணர்ச்சிகளையும் பண்டு ஒருகாலத்துக் கதையிற் புகுத்தக் கூடாது; அத்தகைய நூலில் வரும் கதாபாத்திரங்களின் நடை, உடை, பேச்சு, பாவனை, பிற செயல்கள் யாவையும் கதைக்கேற்ற காலத்தோடு பொருந்தியிருக்க வேண்டும். இப்பொருத்தங்களோடு முரணாகாத வகையில் பிற கற்பனைகள் அமைய வேண்டும். இஃதாயின், வரலாற்று நவீன ஆசிரியர்கள் கதையோடு தொடர்புடைய காலத்து அரசியல் வரலாற்றை மட்டும் அறிந்தார் போதாது. சமூக வரலாற்றின் பல பகுதிகளான கலை, இலக்கியம், பேச்சு, மரபு, நியாயம், உண்ர்ச்சி, அறிவு, ஆற்றல், இயல்பு என்பனவற்றை நன்கு உணர்ந்து கொண்டு அவற்றோடு சிறிதும் மாறுப்டாத வகையில் நூல் யாத்தல் வேண்டும். உதாரணமாக இராசராசன்-1ஐப் பற்றி வரலாற்றுக் கதை எழுதப்புகும் ஆசிரியர், அவரது சைவப்பற்று, கொடைத்திறன், கலையுணர்ச்சி, இலக்கிய ஆதரவு முதலிய பண்புகளோடு, சளுக்கர்களோடு அவர் புரிந்த போர்களில் அவர் மேற்கொண்ட இரக்கமற்ற செயல்களையும் எண்ண வேண்டும். விக்கிரமாதித்தன் என்று புகழ்ப்பெயர் படைத்த இரண்டாம் சந்திர குப்தனைப் பற்றி நூல் இயற்றப் புகுவார் வரலாறு நன்கறிந்துள்ள அவர்தம் பெருமைகளையேயன்றி, அவர் தம் அண்ணன் இறந்ததற்கு μரளவு காரணமாக இருந்ததோடு அவன் இறந்த பின் அவன் மனைவியையே மணந்துகொண்டு அவ்வாட்சியையும் (சுக்ரீவனைப்போல) கைப்பற்றிக் கொண்ட பண்பினையும் நினைவு கூற வேண்டும். இன்றேல் அவ்வாசிரியர் எழுதும் இலக்கியம் உண்மையோடு மாறுபடும்; மாறுபடின் அது வரலாற்று இலக்கியமாகாது.
இவ்வாறு வரலாற்று உண்மையோடு மாறுபடாமல் கதை எழுத வேண்டுமாயின் வரலாற்று உண்மை யாது என்பது முதற்கண் தெரிய வேண்டும். இங்ஙனம் தெரிதற்கு உதவுவனவே வரலாற்றுச் சான்றுகள் என்பன. அச்சான்றுகள் பொதுவாகக் கல்வெட்டுகள், பண்டைய கட்டட இடிகரைகள், நாணயங்கள், இலக்கியம், பிற நாட்டார் கூற்றுகள், கடிதங்கள், நாட்குறிப்புகள் எனப் பலவகைப் படுவனவாம். இவற்றில் வரலாற்றுக் கதாபாத்திரங்களின் குணாதிசயங்களை நுண்மையாகப் புலப்படுத்தக் கூடிய அளவிற்க்குப் பயன்படக் கூடியவை அக்காலத்தே எழுதி
இடப்படும் வாழ்க்கைக் குறிப்புகள் போன்றவையேயாம். இத்தகைய சான்றுகள் மேனாடுகளில் பல உள. தூசிடிடிஸ்(Thocydides), செனபன்(Xenophon), சீசர்(Ceasar), டாசிடஸ்(Tacitus)என்னும் பண்டைய வரலாற்றாசிரியர்களும் ஆங்கிலோ-சாக்ஸன் கிரானிகில்(The Anglo Saxon Chronicle) போன்ற குறிப்புகளும் சான்றுகளாக அமைந்தமையாலேயே கிளாரண்டன்(Clarendon)முதல் கிப்பன்(Gibbon)* ஈறாகப் பல பிற்கால ஆசிரியர்கள் புகழ்பெற்ற வரலாற்று நூல்கலை இயற்ற முடிந்தது. இத்தகைய இலக்கியங்கள் நம் நாட்டில் இல்லாமையால், வரலாற்று** நவீனங்கள் இயற்றப்புகும் நம் ஆசிரியர்கள் நமது கதைகளில் பெரும்பாண்மை இடங்களில் வரலாற்றிற்கு எட்டாத (வரலாறு எட்ட மறுப்ப)தைக் கற்பனையைக் கொண்டு நிரப்ப வேண்டியிருக்கிறது. இது அவர்களால் தடுக்க முடியாதாயினும், இந்நிலைக்குட்பட்ட இலக்கியங்களை வரலாற்று நவீனங்கள் எனல் μரளவே பொருந்தும் என்பது வெளிப்படை. சில மன்னர்களின் பெயர்களும் ஊர்ப்பெயர்களும் மட்டுமே தெரிந்திருந்தால் அவற்றை வைத்துக்கொண்டு பிறவற்றையெல்லாம் கற்பனையால் நிரப்பும் கதைக்கு ஸ்காட்டின் `டாலிஸ்மன்', `ஐவன்ஹோ', லிட்டனின் `பாம்பேநகரத்தின் இறுதி நாள்கள்' போன்ற கதைகளுக்கும் உள்ள வேறுபாடு தெற்றன விளங்கும். அதாவது ரிச்சர்டு-Iஐப்பற்றி ஸ்காட் கூறும் உண்மைகளைப் போன்றவையல்ல, நரசிம்ம பல்லவனைப் பற்றி நம் வரலாற்று இலக்கிய கருத்தாக்கள் கூறுவன. இத்தகைய இலக்கியங்கள் இயற்றுவது குற்றம் என்பது என் கருத்தன்று; அவற்றை வரலாற்றுக் கதைகள் என்று குறிப்பிட வேண்டாம் என்பதே.
இனி, வரலாற்றுச் சான்றுகள் போதிய அளவில் கிடைக்காமையால் அக்குறைப்பாட்டைக் கற்பனைக் காட்சிகளால் நிறைவாக்கும்போது, அவற்றில் பெரும்பாலும் ஆசிரியர்களால் கதாநாயகன் என்று நிர்ணயித்துக் கொள்ளப்படுவோன் காப்பியத்தலைவனைப்போல அமைந்துவிடுவதே மரபாயிருந்து வருகிறது. ஆனால் பண்டைக்கால வரலாற்று நிகழ்ச்சிகளை அடிப்படையாக கொண்டு இயற்றப்பெரும் தற்கால வரலாற்றுக் கதைகள் இத்தகைய குறைபாடுகளின்றும் தப்ப வழியில்லை. அன்றியும் அண்மையில் நிகழ்ந்த வரலாற்று நிகழ்ச்சிகளை அடிப்படையாகக் கொண்ட வரலாற்று நவீனங்களிலும் இம்மரபு தொத்தி பரவுவதும் இயல்பாயுள்ளது. பத்தொன்பதாம் நூற்றாண்டில் திருவாங்கூரில் இருந்த வேலுத்தம்பியைப் பற்றி அண்மையில் வெளியான நூல்கள் புகுத்தும் புனை கதைகள் இவ்விரும்பத்தகாத இயல்பினை நன்கு விளக்குகின்றன. இதற்கு மேலும் எடுத்துக்காட்டுகள் வேண்டுவதின்று.
ஆகையால் நமது பண்டைய வரலாற்றை ஆதாரமாக கொண்டு இயற்றப்பெறுவதாகக் கூறிகொள்ளும் கதைகளைப் படிப்பவர்கள் அவற்றை வெறுங் கற்பனைக் கதைகளைப் படிப்பதாகவே நினைத்துக்கொண்டு படித்து மகிழ்ச்சியடைவதே நல்லது என்று தோன்றுகிறது.
இதுகாறும் கூறியவற்றைக் கொண்டு `கடல் புறா'வை ஆராயும்பொழுது மேற்கூறிய இயல்பான குறைபாட்டினின்று இந்நூல் தன்னை முற்றிலும் காத்துக்கொண்டு வரலாற்று உவமைகளுக்குச் சிறிதும் மாறுபடாதவாறு இயற்றப்பட்டுள்ளது என்பது தெளிவாகும்.
* உதாரணத்திற்காக இவர்களைக் கூறினும், பிரான்ஸ், ஜெர்மனி, இத்தாலி போன்ற பிற ஐரோப்பிய நாடுகளிலும் மிளிர்ந்த வரலாற்றாசிரியர்களையும் கொள்க.
** பாணனுடைய ஹர்ஷ சரிதம், பில்ஹணர் இயற்றிய விக்ரமாங்க தேவ சரிதம் ஆகிய நூல்களும் வரலாற்றுக் கதாசிரியர்களுக்குப் பயன்படும் அளவிற்குச் சமுதாயப் பண்பை விளக்குவனவாக அமையவில்லை. கல்ஹணர் இயற்றிய காஷ்மீர நாட்டு வரலாறான இராசதரங்கணி தென்னாட்டைப் பற்றியதில்லை. ஆதலால் தமிழ்நாட்டு வரலாற்றுக் கதை எழுதுவோர்க்கு அது பயன்படாது.
இனி இந்நூல் `இளைய பல்லவ'னான கருணாகரத் தொண்டைமானது(கற்பனை கலந்த) வரலாற்றை விவரிக்குமுகத்தான் குலோத்துங்க சோழனது `இளங்கோப் பருவ'த்தைப் பற்றியும் கதையிற் பிணைத்துக் கூறுகின்றது. கீழை சாளுக்கிய மன்னரான ராஜராஜ நரேந்திரரின் புதல்வரான ராஜேந்திரர்-ii (சாளுக்கியர்) என்னும் குலோத்துங்கர்-I (சோழ சாளுக்கியர்) கி.பி1063லிருந்து தாம் ஆட்சியெய்திய *1071வரை எங்கிருந்தார், எத்தகைய செயல்களில் ஈடுபட்டிருந்தார் என்னும் கேள்விகளுக்கு இதுகாறும் வரலாற்றாசிரியர்கள் பலவாறாக விடை கூறி வந்துள்ளனர். கீழை சாளுக்கிய ஏழாம் விஜயாதித்தரைச் சோழ மன்னரான வீர ராஜேந்திரர் ஆதரித்தமையால் வேங்கியில் அரசாள இயலாமற்போன குலோத்துங்கர் பஸ்தார் பிரதேசதில் வெற்றி காணும் முயற்சியில் தமது காலத்தை கழித்தார் என்று பேராசிரியர் க.அ.நீலகண்ட சாஸ்திரியார் உள்படப் பல அறிஞர்கள் கூறிவந்துள்ளனர். ஆனால் அவ்விடைக் காலத்தே இளங்கோவான `அபயன்' `பூர்வதேச'மான கீழை நாட்டில் ஸ்ரீ விஜயப் பேரரசோடு பொருது வெற்றி காண்பதில் முனைந்திருந்தமை பல சான்றுகளையும் காய்தல் உவத்தலின்றி ஆய்வோர்க்குப் புலனாம். `பூர்வதேசம்' என்ற கல்வெட்டுகள் குறிக்கும் இடம் பஸ்தார் பிரதேசமன்று, இந்தோ-சீன நாட்டுப் பகுதியான காந்தார நாடே என்று கொள்ளவேண்டிய நிலை இப்பொழுது ஏற்பட்டு உள்ளது. சீனரது வரலாற்றுக் குறிப்புகளைக் கொண்டும் குலோத்துங்கன் கீழை நாடுகளில் இருந்தமை பெறப்படும். குலோத்துங்கர் என்னும் பெயரின் ஈற்றில் அமைந்து கிடக்கும் `உத்துங்கன்' என்னும் சேர்க்கை மாற விஜயோத்துங்கன், சங்கிராம விஜயோத்துங்கன் முதலிய ஸ்ரீ விஜயப் பட்டப்பெயர்களைப் பின்பற்றியதாம். குலோத்துங்கர் கடாரத்தை வென்றமை மறக்க முடியாத வரலாற்று உண்மையாகி விட்டது. இவ்வெற்றி 1071-க்கு முற்பட்டது. ஆதலால் `கடல் புறா' ஆசிரியர் தமது கதையில் அமைத்துக் கொண்டபடி ஸ்ரீ விஜயத்தை வென்றமைக்கு வரலாற்று ஆதாரம் முற்றிலும் உண்டு.
இனி `கடல் புறா'வைப் படிப்பவர்கள் இந்நூலைக் கொண்டு ஒரு கதையைப் படித்து இன்புறுவதோடு, ஆங்காங்கே ஆசிரியர் திறம்படப் புகுத்தியிருக்கும் அரிய கருத்துக்களையும் கண்டு பாராட்டுவர் என்பது ஒருதலை. இயற்கைக் காட்சிகளையும், மானிடப் பண்பினையும் ஒவ்வோரிடங்களில் மிகையுமின்றி குறையுமின்றி ஆசிரியர் கையாண்டுள்ள இலக்கிய மரபு போற்றத் தக்கதேயாம்; அன்றியும் அது ஆசிரியரது பரந்த ஆய்வுத் திறனைக் காட்டுகிறது. கருத்து எவ்வளவு கோவைப்பட அமைந்துள்ளதோ அவ்வளவு தெளிவாகவும், ஆற்றொழுக்காகவும் அமைந்துள்ளது ஆசிரியரது தமிழ்நடை. படிக்கப் படிக்கத் தெவிட்டாத சுவைமிக்க நூலாக அமைந்துள்ள கடல் புறவை யாவருமே படிதின்புறக்கூடும் என்பது இந்நூலின் முதல் சில பக்கங்களைப் படித்த உடனேயே விளக்கமாகும்.
இவ்வாறு வரலாற்று ஆதாரத்தைக் கொண்டும், அக்கால மரபிற்கும் பிற சமூகச் சூழ்நிலைகளுக்கும் முரணாகாதவாறும் கற்போற்க்குக் கற்கண்டெனச் சுவைக்கும் அழகிய வரலாற்றுப் புதினமொன்றைச் சாண்டில்யன் அவர்கள் தமிழகத்திற்குத் தந்துள்ளார். இந்நூலுக்குத் தமிழ்நூல் கற்போரின் உள்ளமார்ந்த ஆதரவு பெருமளவில் உண்டு என்று முன்பே நிரூபிக்கப்பட்டுவிட்டதாயினும் இத்தகைய இலக்கிய முயற்சிகளை ஊக்குவிக்கும் இந்நூலை விலை கொடுத்து வாங்கிப் படிக்கும் கட்டுப்பாடு தமிழ் மக்களுக்கு உண்டு. ஆசிரியரையும் அவர்தம் நூலையும் அறிமுகப்படுத்துவது எனது பணியன்று;
*கி.பி1071 மே மாதம் மூன்றாம் நாளை அதிராஜேந்திரரது சித்த மல்லிக் கல்வெட்டால்(கல்வெட்டு 5/1945-46) குலோத்துங்கன் 1071 மே மாதத்திற்கு முன்பு சோழப் பேரரசாட்சியைக் கைபற்றியிருக்க முடியாது என்பது உறுதியாகும்.
`சாண்டில்யன்' தமிழுலகம் அறிந்த பெயர். அவர் எனக்கு இட்ட பணி மூலம் என்னைத் தமிழுலகிற்கு அறிமுகப்படுத்த விரும்பினார் போலும். தமிழிலக்கியம் என்னும் பூங்காவில் இத்தகைய அரிய அழகிய மலர் மேலும் பூத்து நறுமணம் வீசத் தமிழ்த்தாய் அருள் புரிவாளாக.
-ந.சுப்பிரமணியன்

0 comments: